Subscribe Us

Header Ads

என்னை ஈர்த்த புத்தகம் – அறிவுசார் நிகழ்வுகள்.

என்னை ஈர்த்த புத்தகம் – அறிவுசார் நிகழ்வுகள்.

முன்னுரை:
                  தேனினும் இனிய செந்தமிழ் மொழியில் எத்தனையோ புத்தகங்கள் உள்ளன. அவற்றுள் என்னை ஈர்த்த புத்தகம் அறிவுசார் நிகழ்வுகள் ஆகும்.
காரணம்:
          நிஜமும் நிழலும் இரு தொடர்புடைய எதார்த்தங்கள் சிலர் நிழலை நிஜமாகவும் இன்னும் சிலர் நிஜத்தை நிழலாகவும் பார்ப்பார்கள். இது அறியாமையாகும் . இதேபோல் கதையையும் நிகழ்வுகளையும் ஒப்பிடலாம். கதைகள் பொதுவாக கற்பனைகளாக இருக்கும். கதை வழி ஒரு செய்தியையோ , ஓர் அறநெறி மதிப்பையோ தரலாம். ஆனால், அறிவுசார் நிகழ்வுகள் கற்பனை அல்ல . மாறாக உண்மை சம்பவங்கள். என்னை ஈர்த்த அறிவுசார் நிகழ்வுகள் புத்தகம் தரும் பாடம் ஆழமானதும் அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கும். ஒரு மனிதனின் உள்ளத்து உணர்வுகளை தாக்கி மாற்றத்தை ஏற்படுத்தும்  தன்மை கொண்டது அறிவுசார் நிகழ்வுகள். இவையே என்னை பெரிதும் ஈர்க்கக் காரணமாகும்.
சிறப்புகள்:
             நிகழ்வுகளுக்கே உரித்தான வீச்சும் வேகமும் அறிவுசார் நிகழ்வுகளில் இருப்பதை  நம்மை வாசிக்கும்போதே உணரச் செய்யும். வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளுக்கு மீண்டும் உயிரோட்டம் கொடுத்து, அவை தரும் பாடகங்களை நமக்கு இப்புத்தகம்  கற்பிக்கும். அறிவுசார் நிகழ்வுகள் தனி மனித வாழ்க்கையும், சமூக வரலாற்றையும் மாற்றும் திறன் கொண்டது.படித்து முடியும் வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தைத் தூண்டச் செய்கிறது, ஒரு முறைக்கு பல முறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டச் செய்கிறது இப்புத்தகம்.
இயற்றியவர்:
                    இப்புத்தகத்தின் ஆசிரியர் சேவியர் அந்தோனி,சே.ச. அவர்கள் குட்டிகள் கதைகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர். திண்டுக்கல் மாவட்ட மிக்கேல்பாளையம் என்ற ஊரில் பிறந்தார். இவர் ஒரு சேசு சபைத் துறவி . திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் விஸ்காம் டெக்னாலஜி துறையில் பேராசிரியராக பணியாற்றினார். இப்பொழுதும் இன்னொரு யுக்தியாம் நிகழ்வுகளின் வழியாக, பலதரப்பட்ட செய்திகளை ஆறு தொகுதிகளாக- ஆளுமை நிகழ்வுகள், ஆன்மிக நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், அறிவியல் நிகழ்வுகள் மற்றும் பல்சுவை நிகழ்வுகள் என வகைப்படுத்தி, தொகுத்து மக்களுக்கு வழங்கியுள்ளார்.
புத்தகத்தின் அமைப்பு:
                     அறிவுசார் நிகழ்வுகள் எழுபத்து ஐந்து  நிகழ்வுகளைக் கொண்டு அடங்கியுள்ளது.   இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வுகளும் பல சிறப்பு மிகுந்த மனிதனது பண்புகளைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தும். எழுபத்து ஐந்து நிகழ்வுகளில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அகப்பார்வை, அணுஅறிவு , சிந்தனை என தலைப்புகள், தத்துவங்கள் ,  வரைப்படங்கள்  என புத்தகம் மேலும் சிறப்பாக அமைந்துள்ளது.
என்னை ஈர்த்த வரிகள்:
                              அறிவுசார் நிகழ்வுகள் புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் என்னை ஈர்க்கச்  செய்தது. அதிலும் தத்துவ ஞானி சாக்ரடீஸ், கௌதம புத்தர், உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் என்னை  மிகவும் ஈர்த்தது. மேலும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஓராயிரம் அர்த்தங்கள் அடங்கி இருக்கின்றன என்னும் இவ்வரிகள் என்னை சிந்திக்கவும் , மாற்றவும் செய்தது. 
முடிவுரை
                இத்தகைய சிறப்புகள் நிறைந்த இப்புத்தகம் சாதாரண மனிதனையும் சிறந்த சாதனையாளராக மாற்றும் , மேலும் என்னைப் போலவே எல்லாரையும் இப்புத்தகம் ஈர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!. 

Post a Comment

0 Comments